agathi keerai

நோய்களை அகற்றும் அகத்திக்கீரை!

தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துகளையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.
அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும்.
ஈரப்பதம் – 73 சதம், புரதச்சத்து – 83 சதம், தாதுஉப்புக்கள் – 3.1 சதம், நார்ச்சத்து – 2.2 சதம், மாவுச்சத்து – 12 சதம், கொழுப்புச்சத்து – 1.4 சதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின்-ஏ, தயாமின், ரிபோஃபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின்-சி போன்றவை அடங்கியுள்ளன.
மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.
இது நச்சை நீக்கும் குணமுள்ள தாகையால், பொதுவாக மருந்துண்ணும் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
இலையை நறுக்கி வதக்கி உண்ணலாம். குழம்பிலிட்டும் பயன்படுத்தலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம். பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.
காபி, டீ அதிகமாக சாப்பிட்டு அதனால் பித்தம் அதிகமானவர்கள் வாரம் ஒருமுறை உணவுடன் அகத்திக்கீரை சாப்பிட்டு வர, பித்தம் குறையும்.
பூவைச் சமைத்து உண்டு வர மலச்சிக்கல் சரியாகும். அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு குணமாகும்.
இலைச்சாறை உறிஞ்ச, தலைநீர் இறங்கும். அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும். இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.