agathi-keerai-poriyal

அகத்திக்கீரைப் பொரியல்

தேவையான பொருட்கள்:

  • அகத்திக்கீரை – 1 கட்டு
  • சிவப்பு மிளகாய் – 1
  • சின்ன வெங்காயம் – 12
  • தேங்காய்ப் பூ – 2 ஸ்பூன்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • எண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை – தாளிக்க

செய்முறை:

  1. சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். அகத்திக் கீரையை உருவி, அரிசி களைந்த நீரில் கழுவிக் கொள்ளவும்.
    பின் பொடியாக அரியவும். அரிசி களைந்த நீரை அளவாக ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும் நீரை வடித்து விடவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு, சிவப்பு மிளகாய் கிள்ளிப் போடவும்.
  3. அரிந்து வைத்துள்ள சின்னவெங்காயத்தைப் போட்டு, வதக்கவும். வெந்த கீரையைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய்ப் பூவையும் சேர்த்து, கிளறி இறக்கவும்.
    தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு அகத்திக்கீரை பொருத்தமான உணவாகும்.
  4. அரிசி களைந்த நீரில் கீரையைக் கழுவி, வேக வைப்பதால் கீரையின் கசப்புச் சுவை குறையும். அரிசி களைந்த நீரில் வேக வைப்பதால் சத்து கூடும்.
  5. அகத்திக் கீரை ரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை முறிக்கும் என்று கூறுவார்கள், அதே சமயம் அடிக்கடி சாப்பிட்டால் ரத்தத்தையே முறிக்கும் என்றும் சொல்வார்கள். அதனால், 10 நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை, சமைத்து சாப்பிடலாம். கீரை மெதுவாக ஜீரணம் ஆகும் என்பதால், இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.